சென்னையில்‌ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடம் ஏற்கனவே ஆலோசித்துள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க தே.மு.தி.க. இந்த முறை ஒரு வலுவான கூட்டணியை அமைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மத்திய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்குத் தோழமை கட்சிகள்தான் என்று குறிப்பிட்ட அவர், விஜயகாந்தின் குருபூஜைக்கு அனைத்துக் கட்சியினரும் வந்ததைச் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், அரசியல் நிலைப்பாடு என்பது கட்சியின் எதிர்கால நலன் கருதி எடுக்கப்பட வேண்டிய முடிவு என்பதால், தொண்டர்களின் எண்ண பிரதிபலிப்பாகவே தங்களின் அறிவிப்பு இருக்கும் என்று அவர் விளக்கமளித்தார்.