தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சராவது உறுதி என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுவாக ஆளுங்கட்சி மீது தேர்தலுக்கு முன்பாக அதிருப்தி ஏற்படும், ஆனால் தற்போது மக்கள் திமுக அரசை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர் என்றார். மக்கள் சுட்டிக்காட்டும் சிறு சிறு குறைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், தங்களை மக்கள் இயக்கமாகப் பார்க்கும் பொதுமக்களின் ஆதரவுடன் 2026-இல் திமுக பெரிய வெகுமதியைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வியாசர்பாடியில் பள்ளி மாணவரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு உடனடியாகக் கண்டுபிடித்துத் தண்டிக்கும் என்று கூறினார்.
அங்கு கஞ்சா விற்பனையைக் கண்டுபிடித்தது காவல்துறையினரே தவிர எடப்பாடி பழனிசாமி அல்ல என்று சாடிய அவர், குற்றம் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவே அரசு பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களை அமைத்து வருவதாகத் தெரிவித்தார். ஊடகங்கள் பின்தொடரும் வகையில் இரவு பகல் பாராது களத்தில் நின்று பணியாற்றும் இந்த அரசை எந்த சக்தியாலும் முடக்க முடியாது என்றும், மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
