உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஷாலினி என்பவர், தனது வளர்ப்புப் பூனைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில், பூனைக்குச் சிகிச்சை அளிக்க சுமார் ரூ. 1 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்த பின்னரும், பூனையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், மாறாக அதன் நிலைமை மோசமடைந்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தவறான சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாமல், சிகிச்சைக் கட்டணம் என்ற பெயரில் தன்னிடம் அதிகப்படியான தொகையை மருத்துவர் ஏமாற்றிப் பறித்துவிட்டதாக ஷாலினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்நிலையில் செல்லப் பிராணிகள் மீதான பாசத்தைப் பயன்படுத்திப் பணத்தைப் பறிக்கும் இத்தகைய மருத்துவமனைகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.