உலகம் முழுவதும் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் பின்னணி இசையாகும். பட்டிதொட்டியெங்கும் மிரள வைத்த அந்த இசைக்குச் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், தற்பொழுது ‘பிளாஸ்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் தடம் பதித்துள்ளார்.
இவ்வளவு பெரிய புகழ்பெற்ற இசையமைப்பாளராக வலம் வரும் இவருக்குள் இருக்கும் ஒரு தீராத வலி, தற்பொழுது தெலுங்குத் திரைப்படமான ‘கல்ட்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் வெளிப்பட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது. அந்த மேடையில் தனது கடந்த கால கசப்பான பக்கங்கள் குறித்து மனம் திறந்து பேசிய ரவி பஸ்ரூர், தனக்கு 25 ஆண்டுகால இசை அனுபவம் உள்ளதாகவும், எப்போதுமே நல்ல மனிதர்களுக்கு நல்ல இசையைத் தரவே விரும்புவதாகவும் கூறினார்.
மேலும், தனக்கு 18 வயது இருக்கும்பொழுது இந்த வாழ்க்கை வேண்டாம் என்று நினைத்து இரண்டு முறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகக் கூறி அதிர வைத்தார். அப்படி இரண்டாவது முறை தன்னை மரணத்தின் எல்லையிலிருந்து காப்பாற்றிய ஒரு மனிதர், இவருடைய இசையைக் கேட்டு வியந்து ஒரு கீபோர்டும், ரூ.35,000 பணமும் கொடுத்து மீட்டெடுத்ததாகவும், தன்னை வாழ வைத்த அந்த மனிதரின் பெயரான ‘ரவி’ என்பதைத்தான் அன்றிலிருந்து தன் பெயராக மாற்றிக்கொண்டதாகவும் மேடையில் மிகவும் உருக்கமாகப் பேசினார்.
