கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் நடத்தையை சந்தேகித்து மனைவியின் தலையை மொட்டையடித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தோடலபாகி கிராமத்தைச் சேர்ந்த 31 வயது உமேஷ் கொத்தலகி என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு மனைவி கதவைத் திறக்க தாமதம் செய்ததால் ஆத்திரமடைந்த உமேஷ், வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு மனைவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர் மின்சார கருவியைப் பயன்படுத்தி அவரது தலையை வலுக்கட்டாயமாக மொட்டையடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
உணவு வாங்குவதற்காக மற்றொரு நபர் வீட்டுக்கு வந்ததை அடுத்து, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த உமேஷ் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சவாலகி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உமேஷை கைது செய்தனர்.
ஏற்கனவே இது போன்ற துன்புறுத்தல்கள் குறித்து பெற்றோர் முன்னிலையில் சமரசம் பேசப்பட்ட நிலையிலும், இந்த அத்துமீறல் அரங்கேறியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
