உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அரசு பிரேதப் பரிசோதனை மையத்தில், உயிரிழந்தவரின் உடலைத் துணியால் சுற்றித் தருவதற்கு ஊழியர்கள் ₹3,000 லஞ்சம் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட ரசித் என்பவரின் உடலை வாங்க வந்த அவரது குடும்பத்தினரிடம் அங்கிருந்த ஊழியர்கள் பணம் கேட்டுள்ளனர்.

அவர்கள் பணம் தர மறுத்ததால், சடலத்தைத் தொடக்கூட ஊழியர்கள் மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி, உயிரிழந்தவரின் உறவினர்களே அருகிலுள்ள மயானத்திலிருந்து துணியை வாங்கி வந்து சடலத்தைப் போர்த்தியுள்ளனர். இந்த அவல நிலையை அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் சேவையிலும் ஈடுபட்டு வருவதால், சடலங்களை எடுத்துச் செல்ல மக்களிடம் அதிகப்படியான பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

“>

 

இதற்கு முன்னரும் இதே மையத்தில் சடலங்களுக்கு அருகே ஊழியர்கள் தவறாக நடந்துகொண்டது மற்றும் வெப்ப அலை காரணமாக அதிகப்படியான சடலங்கள் தரையில் கிடத்தப்பட்டது போன்ற பல சர்ச்சைகள் வெடித்தன. தற்போது லஞ்சம் கேட்ட விவகாரம் அந்த மையத்தின் நிர்வாகச் சீர்கேட்டை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.