மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், திருமணமான 20 வயது இளம்பெண் மோனிகா சவுகான் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தையல் தொழில் செய்து வந்த மோனிகா, துணி எடுப்பதற்காகத் தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி தனது கணவர் ரித்தேஷிடம் கேட்டுள்ளார்.

ஆனால், கணவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில், மோனிகா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், கடந்த 2025 ஏப்ரல் முதல் தனியாக வசித்து வந்தனர்.

மோனிகாவின் தந்தை ஹிராலால் சவுகான், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் காவல்துறை மீது பரபரப்பு புகாரை அளித்துள்ளார். தனது மகள் புகுந்த வீட்டில் சித்திரவதைக்கு உள்ளானதாகவும், அவர் காணாமல் போனபோதே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபரீதத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது விஜய் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குடும்பத்தினரின் புகார்கள் மற்றும் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.