தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், நடிகர் விஜய் முன்னிலையில் மருதமலை மாமணியே முருகையா என்ற பக்திப் பாடலைப் பாடியது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பாடல் வரிகளை அரசியல் மேடையில் பயன்படுத்தியது முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அரசியல் ஆதாயத்திற்காகப் பக்திப் பாடல்களைத் தவறாகப் பயன்படுத்துவது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ள முருகன், யதார்த்தமாகவே அந்தப் பாடலைப் பாடியதாகவும், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பாடலைப் பாடியதற்கும் தவெக தலைவர் விஜய்க்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது பாடலால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
