“மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாடியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற மௌன ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற இலக்கோடு திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என உறுதிபடத் தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் விமர்சனம் குறித்துக் கேட்டபோது, அது அவர்களின் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தப் பேசியது என்றும், விமர்சனங்களைத் தாண்டி திமுக மக்களின் மனங்களை வென்று வருவதால்தான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது என்றும் பதிலடி கொடுத்தார். மேலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வை 41 சதவீதத்திலிருந்து உயர்த்தாதது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாகக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி மற்றும் ஜல்ஜீவன் மிஷன் நிதி ரூ.3,112 கோடி போன்றவற்றை வழங்காமல் மத்திய பட்ஜெட் தமிழகத்தைப் புறக்கணித்துள்ளதாகக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
