நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று (பிப். 02) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கியக் குறிப்புகளை மேற்கோள் காட்டிப் பேசத் தொடங்கினார். ராணுவ விவகாரங்கள் மற்றும் அரசின் கொள்கைகள் குறித்து அவர் வாசிக்கத் தொடங்கியபோது, அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ராகுல் காந்தி தனது வாதத்தை முன்வைத்துக் கொண்டிருந்த போதே, திடீரென அவரது மைக் துண்டிக்கப்பட்டது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

​ராகுல் காந்தியின் மைக் துண்டிக்கப்பட்டதற்குப் பதிலளித்த சபாநாயகர் தரப்பு, அவையில் உறுதிப்படுத்தப்படாத மற்றும் ஆதாரமில்லாத தகவல்களைப் பேச அனுமதி இல்லை என்று விளக்கம் அளித்தது. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களோ, “எதிர்க்கட்சித் தலைவரின் குரலை ஒடுக்கவே மைக் அணைக்கப்பட்டது” என்று குற்றம் சாட்டி அவையில் முழக்கமிட்டனர். ஒரு முன்னாள் ராணுவத் தளபதியின் புத்தகத்தில் உள்ள தகவல்களை வாசிப்பது எப்படி ஆதாரமற்றதாக முடியும் என்று ராகுல் காந்தி தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது. இந்த மைக் துண்டிப்பு விவகாரம் காரணமாக அவையில் கடும் அமளி ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.