மத்திய பட்ஜெட் 2026-ல் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைக் கவர்வதற்காகச் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தை நடத்தும் பாஜக அரசு, தமிழ்நாட்டை மட்டும் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “எவ்வளவு திட்டங்களை அறிவித்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு வாக்கு கூட விழாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்; அந்த வன்மத்தின் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறார்கள்” என்று அவர் தனது அறிக்கையில் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
மேலும், பாஜக அரசுக்கும் அவர்களுக்குத் துணை போகும் ‘அடிமைகளுக்கும்’ வரும் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மற்ற மாநிலங்களுக்குக் கோடிக்கணக்கில் நிதியை அள்ளி வழங்கும் மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் தமிழ்நாட்டிற்குப் பிரத்தியேக திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சரின் இந்த ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ என்ற முழக்கம் ஆளுங்கட்சியின் மிக முக்கியத் தேர்தல் பிரச்சார ஆயுதமாக மாறியுள்ளது.
