மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்திய – சீன எல்லை விவகாரத்தைக் கையில் எடுத்தார். “கைலாஷ் மலைப்பகுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பது ராணுவத்தில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும்; அந்தத் தகவல்கள் இந்தச் சபை வழியாக மக்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?” என மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். எல்லையில் நிலவும் பதற்றம் குறித்தும், நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு குறித்தும் அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மிகக் கடுமையான பதிலடி கொடுத்தார். “இந்திய எல்லைப் பகுதியைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நினைத்தால், முதலில் 1962-ஆம் ஆண்டு போரின் போது என்ன நடந்தது என்பது குறித்துப் பேச வேண்டும்” என்று காங்கிரஸ் ஆட்சியின் பழைய காலத்தைக் குறிப்பிட்டு சாடினார். இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அவை போர்க்களமாக மாறியது. கூச்சல் குழப்பம் மற்றும் அமளி கட்டுக்கடங்காமல் போனதால், சபாநாயகர் மக்களவையைத் மாலை 4 மணி வரை ஒத்திவைக்க நேரிட்டது.
