நாகை மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, திமுகவின் மூத்த இஸ்லாமிய முகங்களில் ஒருவரான GSB அலிசாஹிப் அக்கட்சியிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த இவர், டெல்டா மாவட்டங்களில் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படுபவர்.
இது குறிப்பாக, ‘இசை முரசு’ நாகூர் ஹனிபாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்த அலிசாஹிப், திமுகவின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக திமுகவிற்காக உழைத்த அலிசாஹிப்பின் இந்த திடீர் கட்சித் தாவல், டெல்டா மாவட்ட அரசியலில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
மேலும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரைப் போன்ற ஒரு மூத்த தலைவர் அதிமுகவில் இணைந்திருப்பது, நாகை மாவட்டத்தில் அக்கட்சியின் பலத்தை அதிகரிப்பதோடு, வரவிருக்கும் தேர்தல்களில் திமுகவின் வாக்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலிசாஹிப்பின் இந்த முடிவு, நாகை மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
