2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச அணி இத்தொடரில் இருந்து வெளியேறியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஒற்றுமையைக் காட்டும் விதமாகவும் கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தைப் புறக்கணிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்தியா செல்லத் தயக்கம் காட்டிய வங்கதேச அணியை ஐசிசி தொடரிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது அல்லது புறக்கணிப்பது என்பது வீரர்களாகிய எங்களது முடிவல்ல. இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. பாகிஸ்தான் அரசு மற்றும் பிசிபி (PCB) தலைவர் என்ன உத்தரவு பிறப்பிக்கிறார்களோ, அதனை அப்படியே பின்பற்றுவோம் என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி சந்தித்துப் பேசிய பிறகே இந்த நிபந்தனை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தொடரை முழுமையாகப் புறக்கணிக்காமல், இந்தியாவுக்கு எதிரான குறிப்பிட்ட போட்டியை மட்டும் புறக்கணிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) பெரும் வருவாயை ஈட்டித் தரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் தவிர்க்கப்பட்டால், அது நிதி ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றுள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.