2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தைப் பாகிஸ்தான் அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் முரண்பாடான முடிவுகளை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கவாஸ்கர் கூறியதாவது: “இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்பது பாகிஸ்தான் விளையாட்டு அமைச்சகத்தின் முடிவல்ல; இது ஒரு முழுக்க முழுக்க அரசியல் ரீதியான முடிவு. உலகக் கோப்பைத் தொடரில் மற்ற அணிகளுடன் விளையாடும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக மட்டும் விளையாட மாட்டோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டிய அவர், “சமீபத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இளைஞர் அணிகளுக்கு இடையிலான போட்டியை மட்டும் அந்நாட்டு அரசு எப்படி அனுமதித்தது? ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்ததால், இந்த முறையும் வென்று இந்தியாவைத் தொடரிலிருந்து வெளியேற்றிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அந்தப் போட்டிக்கு அனுமதி கொடுத்தீர்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்தியாவுடன் விளையாடக் கூடாது என்றால் அனைத்துப் பிரிவுகளிலும் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டியதுதானே? சீனியர் அணி விளையாடாது, ஜூனியர் அணி விளையாடும் என்பது என்ன மாதிரியான வாதம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தான் தனது முடிவை விரைவில் மாற்றிக்கொள்ளும் எனத் தெரிவித்த கவாஸ்கர், “பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுவதாக அறிவிப்பார்கள், பின்னர் நான்கே நாட்களில் அதனைத் திரும்பப் பெறுவார்கள். இது நாம் அனைவரும் அறிந்ததுதான். அதேபோல் இந்த முடிவையும் இன்னும் சில நாட்களில் அவர்கள் மாற்றிக்கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. சர்வதேச அளவிலான எதிர்வினைகள் வந்த பிறகு, பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க அதிக வாய்ப்புள்ளது” என கிண்டலாகக் குறிப்பிட்டார்.