டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், இது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர், இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்து மிட்செல் மார்ஷிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மார்ஷ், “இது குறித்து நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. எங்களது முழு கவனமும் உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே உள்ளது. மற்ற அணிகள் என்ன செய்கின்றன என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று கூறி பத்திரிகையாளரை வாயடைக்கச் செய்தார். வங்கதேசம் வெளியேறியது குறித்த கேள்வி்க்கும், “நாங்கள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்” என அவர் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவை இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் இது குறித்துக் கூறுகையில், “போட்டி தொடங்கவிருக்கும் கடைசி நேரத்தில் இதுபோல விலகுவது முறையல்ல. எதிர்காலத்தில் எந்த ஒரு அணியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடத் துணியாதவாறு, பாகிஸ்தான் மீது ஐசிசி (ICC) கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தனிப்பட்ட ஒரு நாட்டின் முடிவாக மட்டும் இருக்கக் கூடாது, அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து ஆலோசிக்க வேண்டும்” என்றார்.
தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக் கோப்பைத் தொடரில், சூப்பர் 6 சுற்றில் இந்தியாவிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பாகிஸ்தான் வெளியேறியது. இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய அதே நாளில், சீனியர் அணி இந்தியாவுடன் விளையாடாது எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே பிரிவில் (குரூப் ஏ) இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
