2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்தத் திடீர் முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ‘இந்தியா டுடே’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் இத்தகைய தகவல்கள் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றன. இந்தியாவுக்கு எதிராகப் போட்டியிடாமல் இருப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணமும் எனக்குத் தெரியவில்லை. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவது தேவையற்றது.

மேலும் அவர் கூறுகையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஆடும் இந்த நாடகம் இந்தியாவுக்கு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கப் போவதில்லை. ஐசிசி-யின் (ICC) அனைத்து உறுப்பு நாடுகளும் பாகிஸ்தான் வாரியத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளன. எனவே, இவர்களது மிரட்டல்கள் பலிக்காது” என்று சாடினார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் திட்டமிட்டுத் தவிர்க்கும் பட்சத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஐசிசி கடும் அபராதங்களையும், தடைகளையும் விதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி பாகிஸ்தான் வாரியத்திற்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் வாரியம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே இத்தொடரின் முக்கியத்துவம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.