உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண், திருமணமான இரண்டே மாதங்களில் பெற்றோருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச்ம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிதேந்திர குமார் யாதவ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
கணவர் ஜிதேந்திரா ஆன்லைன் சூதாட்டத்தில் ஜோதியின் வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாயை எடுத்துத் தோற்றதால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 அன்று ஏற்பட்ட மோதலில், ஜோதி தனது பெற்றோர் மற்றும் சகோதரரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அவர்கள் ஜிதேந்திராவின் கை, கால்களைப் பிடித்துக்கொள்ள, ஜோதி அவரை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் இந்தக் கொலையைத் தற்கொலை போலக் காட்ட, ஜிதேந்திராவின் சடலத்தைச் சாளரக் கம்பியில் மஃப்ளர் துணியால் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
முதலில் இது தற்கொலை என்று அண்டை வீட்டார் நம்பிய நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் ஜோதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக ஜோதி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர், தலைமறைவாக உள்ள அவரது சகோதரரைத் தேடி வருகின்றனர். காதலித்துக் கைப்பிடித்த கணவனைப் பணப் பிரச்சினையால் மனைவியே கொன்றது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
