புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த அபர்ணா, திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த வியாழக்கிழமை அவரும், அவர் கணவர் கலைராஜனும் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் கலைராஜனின் தாய் தமிழ்செல்வி மட்டும் இருந்துள்ளார்.
தமிழ்செல்வி வீட்டின் பின்பக்கம் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, முன்பக்கக் கதவு வழியாக நைசாக உள்ளே புகுந்த மர்ம நபர், பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகளை பையோடு அள்ளிக்கொண்டு தப்பினார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் புகார் அளிக்க, போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு இளம் பெண் கையில் பையுடன் ஓடுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது.
தனிப்படை போலீசார் செல்போன் சிக்னலை வைத்துத் தேடியபோது, அந்தப் பெண் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கீரன் ஜானி (25) என்பது தெரிந்தது. இதையடுத்து காட்பாடியில் பதுங்கியிருந்த அவரை மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 35 சவரன் தங்க நகைகள், 199 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 50,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கும்பலாகத் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி, ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இவர்கள் திருடி வருவது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
