கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது ஆட்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேடாக இந்த குவாரி செயல்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீரழிந்துவிட்டதாகச் சீமான் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார். கடந்த காலங்களில் மணற்கொள்ளையைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக்கொல்லப்பட்டது மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுகூர்ந்த அவர், தற்போது உண்மையை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனைக்குரியது என்று கூறியுள்ளார்.

தமிழகம் கள்ளச்சாராயம், கஞ்சா புழக்கம் மற்றும் கனிமவளக் கொள்ளையில் முதன்மை மாநிலமாக மாறிவிட்டதாக அவர் சாடியுள்ளார். சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான இத்தகைய வன்முறைகளைத் தடுத்து நிறுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது அடியாட்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் கொல்லப்படுவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.