2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினார்.

அதில் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி, அனைவருக்கும் அம்மா இல்லம், இலவச இருசக்கர வாகன மானியம் மற்றும் 150 நாட்கள் வேலைத் திட்டம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.அதிமுக சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத நல்ல திட்டங்களையும் செய்யும் என அவர் உறுதி அளித்தார்.

நிகழ்வில் பேசிய செல்லூர் ராஜு, திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகச் சாடினார். “விடியல் தருவோம்” என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு கஷ்டத்தை மட்டுமே தந்துள்ளதாக அவர் விமர்சித்தார்.

மக்கள் மின்கட்டணத்திற்கு பயந்து ஃபேன் போடக்கூட தயங்குவதாகவும், மக்களின் வாங்கும் சக்தி முற்றிலுமாக குறைந்துவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் மது விற்பனை அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிய திமுக, தற்போது டாஸ்மாக்கை வளர்த்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரப்படவில்லை என்றும், மக்கள் இந்த ஆட்சியில் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் அவர் பேசினார்.