உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கணவர் கிண்டலாகக் குரங்கு என்று அழைத்ததால் மனமுடைந்த விளம்பர மாடல் அழகி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்ராவின் நியு ஆக்ரா பகுதியில் வசித்து வந்த பிரியங்கா என்ற அந்தப் பெண், தனது கணவர் ரவி என்பவருடன் செல்போனில் காணொளி அழைப்பின் மூலம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பிரியங்கா தனது முகத்தில் பேஷியல் செய்திருப்பதைப் பார்த்த ரவி, விளையாட்டாக அவரை ஒரு குரங்குடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இந்தக் கிண்டலால் மிகுந்த வேதனையடைந்த பிரியங்கா, தனது அறையின் கதவைப் பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது பிரியங்கா சடலமாக மீட்கப்பட்டார். தம்பதியினருக்கு இடையே ஏற்கனவே சிறிய அளவில் மனக்கசப்புகள் இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், கணவரின் இந்தப் பேச்சு தற்கொலைக்குத் தூண்டுதலாக அமைந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
