திருமணமாகி 16 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த குடும்பத்தில், கள்ளக்காதல் மோகத்தால் கணவனைத் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்து, தோட்டத்தில் சடலத்தைப் புதைத்த மனைவியின் விபரீத செயல் 4 மாதங்களுக்குப் பிறகு எலும்புக்கூடாக வெளிவந்து ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த ஓம்கார் என்பவருக்கும் ஓமா பாரதி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தச் சூழலில், ஓமா பாரதிக்கு அவரது அக்கா ஊரைச் சேர்ந்த நன்னே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இவர்களின் கள்ள உறவு குறித்துத் தெரிந்த கணவர் ஓம்கார், மனைவியைக் கண்டித்து அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓமா பாரதி, கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் வாழத் தொடங்கியதோடு, தங்களுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்டவும் ஸ்கெட்ச் போட்டுள்ளார்.

அதன்படி, கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ஓம்கார் நீதிமன்றத் தவணைக்காக வெளியே சென்றிருந்த போது, அவரை ஆசை வார்த்தை கூறி கள்ளக்காதலனின் தோட்டத்திற்கு ஓமா பாரதி வரவழைத்துள்ளார். அங்கு ஓம்காருக்குக் கட்டாயப்படுத்தி மது ஊற்றிக் கொடுத்து போதையாக்கிய பின், கள்ளக்காதலன் நன்னே அவருடன் பயங்கரமாக சண்டையிட்டு கீழே தள்ளியுள்ளார். ஓம்கார் தரையில் விழுந்து உயிருக்காகப் போராடிய போது, இரக்கமே இல்லாமல் ஓமா பாரதியும் அவளது கள்ளக்காதலனும் ஓம்காரின் தொண்டையில் தங்களது கால்களை வைத்து மிதித்து, அவர் மூச்சடங்கி இறக்கும் வரை நின்றுகொண்டே இருந்துள்ளனர்.

பின்னர், அவரது உடலை அதே தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி அதன் மேல் குப்பைகளைக் கொட்டி மறைத்துள்ளனர். கணவர் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அவரது தம்பி சத்தியவீர், மார்ச் 6-ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் போலீசார் சாதாரணமாகக் கையாண்ட நிலையில், 4 மாதங்கள் ஆகியும் ஓம்கார் கிடைக்காததால் சந்தேகமடைந்த தம்பி, கடத்தல் வழக்குப்பதிவு செய்யக் கோரி மீண்டும் போலீசாரை அணுகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், ஓமா பாரதி மற்றும் கள்ளக்காதலன் நன்னேவின் செல்போன் அழைப்புகளை (Call Details) ஆய்வு செய்த போது தான் இவர்களின் கள்ளத்தொடர்பும், கொலைத் திட்டமும் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே இருவரையும் பிடித்துப் போலீசார் தங்களின் பாணியில் விசாரித்த போது, ‘அவன் உயிருக்காகத் துடித்தான், ஆனால் நாங்கள் விடாமல் தொண்டையை மிதித்துக் கொன்றோம்’ எனத் தங்களின் கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

தற்போது கைதான இருவரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ள நிலையில், தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட ஓம்காரின் எலும்புக்கூடை டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கள்ளக்காதலுக்காக 16 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையையும், பெற்ற பிள்ளைகளையும் மறந்து, கணவனைத் துடிதுடிக்கக் கொன்ற இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போதைய ஹாட் விவாதமாக மாறி செம வைரலாகி வருகிறது.