வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் தற்காலச் சூழலில் இந்தியாவிலும் சிறுவர்கள் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு அடிமையாவது பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகனின் ஐபேட் மோகத்தைக் குறைக்கக் கையாண்ட விசித்திரமான முறை இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

 

தனது மகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவனது கண்களைச் சுற்றி கருவளையங்கள் இருப்பது போன்ற ஒப்பனையை அந்தத் தந்தை செய்துள்ளார். உறக்கம் கலைந்து எழுந்த சிறுவன், கண்ணாடி முன் நின்று தனது முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அழத் தொடங்கியுள்ளார்.

அதிக நேரம் ஐபேட் பார்ப்பதால் தான் உனது கண்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தந்தை கூறியதை நம்பிய அந்தச் சிறுவன், பயத்தில் இனி ஐபேட் தொடமாட்டேன் எனக் கூறி தந்தையைக் கட்டியணைத்துக் கொண்டார். சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்தக் காணொளிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் விமர்சனமும் சம அளவில் எழுந்துள்ளன.

குழந்தைகளை மிரட்டிப் பழக்கத்தை மாற்றுவதை விட, அவர்களுக்குப் புத்தகங்கள் வாசிப்பது மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபாட்டை உண்டாக்குவதே நிரந்தரத் தீர்வாகும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.