சர்வதேச சந்தையில் நிலவும் நிலப்பரப்பு அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சம் என்ற நிலையை எட்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ‘உலகத் தங்க கவுன்சில்’ (World Gold Council) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் தங்கத் தேவை கணிசமாகச் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 11 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் 802.8 டன்னாக இருந்த இறக்குமதி, 2025-இல் 710.9 டன்னாகக் குறைந்துள்ளது. அளவின் அடிப்படையில் இறக்குமதி குறைந்திருந்தாலும், விலையேற்றம் காரணமாக அதன் பண மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 2024-இல்: ரூ.5,75,930 கோடி, 2025-இல்: ரூ.7,51,490 கோடி. இதன்படி பார்த்தால் குறைந்த அளவு தங்கம் வாங்கப்பட்டிருந்தாலும், அதற்காகச் செலவிடப்பட்ட தொகை முந்தைய ஆண்டை விட சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் நிலவும் போர்ப்பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவை தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி மேலும் சரிந்து 600 டன்னாகக் குறையக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வது ஒருபுறம் முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
