ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகனும், அந்நாட்டின் செல்வாக்கு மிக்க அதிகார மையமாகத் திகழ்பவருமான மோஜ்தபா கமேனி (56), வெளிநாடுகளில் ரகசியமாகப் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைக் குவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையின்படி, லண்டனின் மிகவும் விலையுயர்ந்த பகுதியான பிஷப்ஸ் அவென்யூவில்  உள்ள பிரம்மாண்ட சொகுசு மாளிகைகள் முதல் ஜெர்மனியின் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரை மோஜ்தபாவின் சொத்துக்கள் விரிந்து கிடக்கின்றன. அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் அமலில் இருக்கும் நிலையிலும், ஷெல் நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் மூலம் இந்த ரகசியப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, அலி அன்சாரி என்ற ஈரானிய வங்கியாளரின் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2014-ஆம் ஆண்டில் மட்டும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்திற்காக சுமார் ரூ.300 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது தவிர, ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் ஸ்பெயினின் மல்லோர்கா போன்ற சர்வதேச சுற்றுலாத் தலங்களிலும் இவருக்குச் சொந்தமான சொகுசு விடுதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பெரும் வருவாய், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் வங்கிகள் வழியாகச் சட்டவிரோதமாகத் திருப்பிவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட நிதியைக் கொண்டே இந்த வெளிநாட்டுச் சொத்துக்கள் வாங்கப்பட்டதாக அந்த புலனாய்வு அறிக்கை குற்றம் காட்டுகிறது.

தற்போது ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வரும் சூழலில், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர் வெளிநாடுகளில் சொத்துக்களைக் குவித்திருப்பதாக வந்த அறிக்கை  ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் ஈரானின் உச்சத் தலைவருக்கு அடுத்தபடியாக மோஜ்தபா கமேனி பதவியேற்பதற்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.