உலக அளவில் தங்கம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையின் அடையாளமாகத் திகழ்கிறது. உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகிலேயே அதிக அளவில் தங்கத்தைக் கையிருப்பில் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 8,133.5 டன் தங்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 3,351.5 டன் தங்கத்துடன் இரண்டாம் இடத்தையும், இத்தாலி 2,451.8 டன் தங்கத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும் பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்த முக்கிய பட்டியலில் இந்தியா 879.6 டன் தங்கத்துடன் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து 7-வது இடத்திலும், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து முறையே 9 மற்றும் 10-வது இடங்களிலும் உள்ளன.
தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், ஒரு நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இத்தகைய தங்கக் கையிருப்புகள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
