இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய மனநல மருத்துவ சங்கம் (IPS) கவலை தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் 77-வது ஆண்டு தேசிய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனநலப் பாதிப்புகள் என்பது வாழ்வின் பிற்பகுதியில் ஏற்படுபவை என்ற பிம்பத்தை இந்த அறிக்கை உடைத்துள்ளது. மன அழுத்தப் பிரச்சினைகளில்:

34.6 சதவீதம் 14 வயதுக்கு முன்பே தொடங்குகின்றன.

48.4 சதவீதம் 18 வயதுக்குள்ளும், 62.5 சதவீதம் 25 வயதுக்குள்ளும் ஆரம்பமாகின்றன.

கடந்த 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகளில், 18-25 வயதுடையவர்களிடையே மன உளைச்சல் 101.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இந்தப் பாதிப்பிற்குப் பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர்:

அதாவது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த அழுத்தம். சமூகத் தனிமைப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு. செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு. தீர்க்கப்படாத உணர்ச்சிப்பூர்வமான சிக்கல்கள் போன்றவைகளாகும்.

இதேபோன்று மன அழுத்தம் காரணமாக பெண்களுக்குப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தற்கொலைக்கு மனநலப் பாதிப்பே மூன்றாவது முக்கியக் காரணமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது‌.

சிகிச்சை அளிக்கப்படாத மன அழுத்தம், காலப்போக்கில் நாள்பட்ட நோயாக மாறி சமூக மற்றும் பொருளாதாரச் சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, இதனை ஒரு ‘பொது சுகாதார அவசரநிலையாக’ கருதி, இளைஞர்களின் மன நலனைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மனநல மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.