இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கார் மற்றும் இலகுரக வாகன உரிமையாளர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் வகையில், ஃபாஸ்டாக் பெறுவதற்கான கட்டாயச் சரிபார்ப்பு முறையை ரத்து செய்துள்ளது. முன்னதாக, சில கனரக வாகன ஓட்டுநர்கள் கார்களுக்கான ஃபாஸ்டேக்குகளைப் பயன்படுத்தி முறைகேடாகக் குறைந்த கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி 1, 2026 முதல் இந்த விதிமுறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளர்வானது கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற பயணிகள் வாகனங்களுக்கு வழங்கப்படும் புதிய ஃபாஸ்டேக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் இனி கூடுதல் ஆவணச் சரிபார்ப்புகள் இன்றி எளிதாக ஃபாஸ்டேக் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும், சுங்கச்சாவடி முறைகேடுகளைத் தடுக்கவும், ஃபாஸ்டாக் சேவைகளை முறைப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
