மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பலியான விமான விபத்தில், கடைசி நேரத்தில் பணிக்கு வந்த விமானி சுமித் கபூர் உயிரிழந்தது குறித்த உருக்கமான பின்னணித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி 28-ஆம் தேதி, மும்பையிலிருந்து பாராமதி நோக்கிப் புறப்பட்ட ‘லியர் ஜெட் 45’ ரக விமானம், ஓடுபாதைக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார், அவரது பாதுகாவலர், விமானி சுமித் கபூர், பெண் துணை விமானி மற்றும் பணிப்பெண் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியான கேப்டன் சுமித் கபூர், உண்மையில் அந்த விமானத்தை இயக்க வேண்டியவர் அல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்று அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய மற்றொரு விமானி, மும்பையின் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார். விமானம் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியும் அவர் வராததால், சில மணி நேரங்களுக்கு முன்பாகவே சுமித் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஹாங்காங்கிலிருந்து சில நாட்களுக்கு முன்பே இந்தியா திரும்பியிருந்த சுமித் கபூர், நிறுவனத்தின் அவசர கோரிக்கையை ஏற்று, அந்தப் பயணத்தை மேற்கொள்ளச் சம்மதித்துள்ளார். இதுவே அவருக்கு வினையாக முடிந்தது. விபத்து நடந்த இடத்தில் உடல்கள் அனைத்தும் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்து கருகியிருந்தன. சுமித் கபூரின் கையில் அணிந்திருந்த ‘பிரேஸ்லெட்’ மூலமாகவே அவரது உடல் அடையாளம் காணப்பட்டதாக அவரது நண்பர்கள் மிகுந்த சோகத்துடன் தெரிவித்தனர்.
வானிலை மோசமாக இருந்ததே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டாலும், சுமித்தின் நண்பர்கள் அதனை மறுக்கின்றனர். பல்லாயிரம் மணிநேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்ட சுமித் கபூர், வானிலை மாற்றத்தைக் கணிக்கத் தவறியிருக்க மாட்டார் என்றும், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் குறிப்பிடத்தக்க விஷயமாக, மறைந்த விமானி சுமித் கபூரின் மகன் மற்றும் மருமகனும் விமானிகளாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
