தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், சித்யதாண்டா கிராமத்தைச் சேர்ந்த ரவி (34) என்பவர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவியின் மனைவி லட்சுமிக்கும், ரவியின் அக்கா மகனான கணேஷ் என்பவருக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்துள்ளது.
இது குறித்து ரவி கண்டித்ததால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் கோபித்துக்கொண்டு பிறந்தவீடு சென்ற லட்சுமியை, உறவினர்கள் சமாதானம் செய்து மீண்டும் ரவியுடன் வாழ அனுப்பி வைத்தனர். ஆனால், லட்சுமி தனது கள்ளக்காதலைத் தொடரவே திட்டமிட்டார்.
கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, ரவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட லட்சுமி, ஹைதராபாத்தில் வேலை செய்து வந்த கணேஷை ஊருக்கு வரவழைத்துள்ளார். அன்றிரவு மதுபோதையில் இருந்த ரவியை, லட்சுமியும் கணேஷும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மறுநாள் காலை ரவி பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். கொலைக்குப் பிறகு லட்சுமி தனது மனநலம் பாதிக்கப்பட்ட இளைய மகனுடன் கணேஷுடன் தப்பியோடிவிட்டார். தலைமறைவாக உள்ள அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
