சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மற்ற கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2000 பேர் அதிமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய அவர், “கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று பொய் வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது, ஆனால் இதுவரை அதை நிறைவேற்றவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார். திமுகவின் தோல்விகளைப் பட்டியலிட்டுப் பேசிய அவர், அதிமுகவின் தேர்தல் திட்டங்கள் சிலவற்றையும் முன்கூட்டியே அறிவித்தார்.

​குறிப்பாக, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு உதவும் வகையில் 5 லட்சம் பேருக்கு ஸ்கூட்டர் வாங்க தலா 25,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அதேபோல், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தித் தரப்படும் என்றும் அதிரடியாகத் தெரிவித்தார். இபிஎஸ்-ஸின் இந்த முன்கூட்டிய தேர்தல் வாக்குறுதிகள் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.