2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேமுதிகவின் 4-ம் கட்டப் பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ள பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேமுதிகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இது என்பதால், மிகவும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கூட்டணி முடிவை அறிவிப்பதில் சற்று காலதாமதம் ஏற்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “இதுவரை கட்சியின் அண்ணியாக இருந்து முடிவெடுத்தேன்; ஆனால், கேப்டன் இல்லாத இந்தச் சூழலில் ஒரு தாயாக இருந்து இந்தக் கட்சியையும், தொண்டர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது” என்று அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் தேமுதிகவின் கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாக உறுதி அளித்துள்ள அவர், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது வரை பாமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட்டணி முடிவை அறிவிக்காத நிலையில், பிரேமலதாவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
