தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.35 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது.
இந்தச் சூழலில், அமலாக்கத்துறை தங்களுக்கு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்றும், விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி ஐ.பெரியசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவரது மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
