கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தலைமைக்கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக அரசின் சாதனைகளை விளக்கியதுடன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: சிறையில் ஒரு நாள் இருந்தாலே மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுக்கும் நபர்களுக்கு மத்தியில், 472 நாட்கள் சிறைவாசத்தை மன உறுதியுடன் எதிர்கொண்டு கோவை மாவட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி மீட்டெடுத்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்து வருகிறது.
மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டத்தைத் தொடர்ந்து, மாணவர்களுக்காக ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டம் மற்றும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ ஆகிய திட்டங்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. மகளிர் உரிமைத் தொகை மற்றும் ‘தோழி’ விடுதிகள் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளன. இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் 45 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதே ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குச் சான்று.
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று விஜய் கூறி வருகிறார். நடிகை திரிஷா பாதுகாப்பாகத் தானே இருக்கிறார்? நாங்கள் ஏதாவது செய்துவிட்டோமா? உங்க அளவுக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது. ஊழலுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்று மேடையில் முழங்கும் விஜய், தனது சொகுசு காருக்கு வரி கட்டாமல் ஏமாற்றியவர். வருமான வரித்துறை இரண்டு நாட்கள் விசாரணை நடத்தியபோது இந்த நேர்மையெல்லாம் எங்கே போனது.
கொரோனா பேரிடர் காலம் மற்றும் இயற்கைச் சீற்றங்களின் போது விஜய் மக்களுக்காக என்ன செய்தார்? கரூர் கூட்ட நெரிசலில் 42 பேர் உயிரிழந்தபோது, எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஒதுங்கி இருந்தவர் அவர். மக்களுக்காக உழைக்காமல், மேடையில் மட்டும் பேசுவது அரசியலாகாது என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது உரையில் கடுமையாக விமர்சித்தார்.
