தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கைரதாபாத் பகுதியில் இன்று காலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. யூகேஜி (UKG) படித்து வரும் 5 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தெரு நாய் ஒன்று திடீரென பாய்ந்து சிறுமியை கீழே தள்ளி, அவரது முகத்தைக் கடித்துக் குதறியது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள், அந்த நாய் சிறுமியின் கன்னத்தில் பலத்த காயத்தை ஏற்படுத்தியது.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபர், உடனடியாக நாயை விரட்டி சிறுமியை மீட்டார். முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதார். தற்போது அந்தச் சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே ஹைதராபாத்தில் தெரு நாய் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் பேசும் திறனற்ற 7 வயது சிறுவன் ஒருவனை நாய்கள் கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும், தற்போது மீண்டும் ஒரு பிஞ்சு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.