கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும், கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கீர்த்தியின் பெற்றோர் சுமார் ₹35 லட்சம் வரை செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சொந்தமாக வீடு கட்டத் திட்டமிட்ட குருபிரசாத், அதற்குத் தேவையான பணத்தைப் பெற்று வருமாறு தனது மனைவியைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஏற்கனவே பெற்றோர் அதிகச் செலவு செய்துள்ளதால் மேலதிகப் பணம் கேட்க கீர்த்தி மறுத்துள்ளார்.

​இதனால் ஆத்திரமடைந்த குருபிரசாத், கடந்த இரண்டு மாதங்களாகக் கீர்த்தியை வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியுள்ளார். மகளின் துயரம் தாளாமல் அவரது பெற்றோர் கடந்த டிசம்பர் மாதம் ₹8 லட்சம் பணத்தைக் கடனாகப் பெற்று குருபிரசாத்திடம் கொடுத்துள்ளனர். இருப்பினும், மீண்டும் கூடுதல் பணம் கேட்டு குருபிரசாத் கீர்த்தியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்தி, கடந்த 24-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், பனசங்கரி போலீஸார் குருபிரசாத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.