தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் பிரதமர் கூறுவது முற்றிலும் அபாண்டமானப் பொய் என்று அவர் மறுத்தார்.
மணிப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியை ஏற்படுத்த முடியாத பாஜகவின் ‘டபுள் என்ஜின்’ அரசு, தமிழகத்தைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை என்றும், உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் வழியாகவே போதைப்பொருள் பரவுவதாக ஆதாரங்கள் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது இடி, சிபிஐ போன்ற அமைப்புகளின் மிரட்டலால் உருவான ‘பிளாக் மெயில்’ கூட்டணி என்று ஸ்டாலின் சாடினார்.
அமித்ஷாவின் கட்டாயத்தால் உடைந்த பாகங்களை ஒட்டி வைத்து இந்தப் புதுப்பிக்கப்பட்ட கூட்டணி உருவானாலும், தமிழக மக்கள் மீண்டும் அவர்களுக்கு ‘கெட் அவுட்’ தான் சொல்வார்கள் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
வரப்போகும் தேர்தல் என்பது வெறும் கட்சிகளுக்கு இடையிலான மோதல் அல்ல, அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான தேர்தல் என்றும் அவர் பிரகடனம் செய்தார்.
