தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ கோ.தளபதி, “காங்கிரஸ் கட்சிக்கு வார்டுகளில் பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லை; அவர்களுக்கு ஒரு தொகுதிக்கு 3,000 முதல் 4,000 வாக்குகள் தான் உள்ளன” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி போன்றோருக்கு அடுத்த முறை சீட் கொடுக்கக் கூடாது என்றும் அவர் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “அதிகாரத் திமிருடன் இருப்பவர்களைப் பார்த்து கூட்டணிக் கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” என்று எச்சரித்தார்.
மதுரை வடக்கு தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் தான் போட்டியிட வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைக்கப் போவதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
தற்போது இந்த மோதலில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டணி தர்மம் கருதியும், முதல்வர் ஸ்டாலினுக்காகவும் தான் நாங்கள் இதுவரை அமைதியாகப் போகிறோம்; எங்களை அவமதிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல் காந்தி தான் முடிவு செய்வார் என்றும், தேவையற்ற விமர்சனங்களைச் செய்து முதல்வரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் அவர் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
