மதுரை திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது எனப் பேசியது கூட்டணியிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், எம்பி பதவியை அனுபவித்துவிட்டு இப்போது ஆட்சியில் பங்கு கேட்பதாக காங்கிரஸாரை விமர்சித்தார். இந்த பேச்சு காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கரூர் எம்.பி ஜோதிமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம்; காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் தலைவர் ராகுல் காந்தி தான் முடிவு செய்வார், உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை” என்று நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலினுக்காகவும் கூட்டணி தர்மத்திற்காகவும் மட்டுமே தாங்கள் பல நெருக்கடிகளைப் பொறுத்துக் கொண்டு அமைதி காப்பதாக ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பொதுவெளியில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அனுபவத்தில் மூத்தவரான கோ.தளபதி பொறுப்புடன் நடந்து கொள்வதே அனைவருக்கும் நல்லது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.