பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்து மூலம் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே தோல்பெட்டி பகுதியில் அதிகாரிகள் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, பயணி ஒருவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக ரூ.31 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அந்தப் பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததும், அது ‘ஹவாலா’ பணம் என்பதும் உறுதியானது. இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்த கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது ஷாகிர் (28) என்ற வாலிபரைக் கைது செய்தனர். பெங்களூருவில் இந்த பணத்தை கொடுத்தது யார் மற்றும் இதன் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.