2026 ஐபிஎல் ஏலத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணி வாங்கியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்தது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளால், ஷாருக்கானுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் மற்றும் பிசிசிஐ-யின் தலையீடு காரணமாக முஸ்தபிசுர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியாது என வங்கதேசம் பிடிவாதம் பிடித்தது. ஆனால், அவர்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததோடு, வங்கதேசத்தை தொடரில் இருந்து நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தேவையில்லாமல் தலையிட்டு சிக்கலை அதிகமாக்கியுள்ளது. வங்கதேசம் நீக்கப்பட்டால் தாங்களும் உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி மிரட்டல் விடுத்தார்.
ஆனால், ஐசிசி கடும் எச்சரிக்கை விடுத்தவுடன் வேறு வழியின்றி பாகிஸ்தான் தனது அணியை அறிவித்தது. பாகிஸ்தானின் இந்த இரட்டை நிலைப்பாடு மற்றும் தேவையற்ற தலையீடு வங்கதேசத்திற்கு ஆதரவாக இருப்பது போல தெரிந்தாலும், இறுதியில் அது வங்கதேச கிரிக்கெட்டிற்குத் தான் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் “குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கப் பார்ப்பதாக” விமர்சித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தைச் சேர்த்துக்கொண்டு அரசியல் செய்ய பாகிஸ்தான் முயல்வதாகவும், இதனால் அந்த நாட்டு வீரர்களின் எதிர்காலம் தான் பாழாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐசிசியுடன் சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்தை வீண் பிடிவாதத்தால் வங்கதேசம் கோட்டை விட்டுள்ளது என்றும், இது அந்த அணியின் மிகப்பெரிய தோல்வி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
