அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பகிர்ந்த ஒரு ‘பென்குவின்’ மீம் படத்தை வைத்து, சீன அரசு ஊடகமான ஜின்குவா (Xinhua) அமெரிக்காவை கடுமையாக கிண்டல் செய்துள்ளது. புவியியல் அறிவு கூட இல்லாமல் அமெரிக்க நிர்வாகம் செயல்படுவதாக சீனா விமர்சித்துள்ளது.

சமீபத்தில் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ‘X’ தளத்தில் ஒரு படம் பகிரப்பட்டது. அதில், அதிபர் ட்ரம்ப் ஒரு பென்குவினை பனிப்பிரதேசத்தில் வழிநடத்தி கிரீன்லாந்து நோக்கி செல்வது போலவும், அதற்கு “பென்குவினைத் தழுவுங்கள்” என்றும் தலைப்பிடப்பட்டிருந்தது. கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் ஆர்வத்தை வெளிப்படுத்த இந்த AI படம் பயன்படுத்தப்பட்டது.

இந்த பதிவைப் பார்த்த சீன அரசு ஊடகமான ஜின்குவா, அமெரிக்காவின் புவியியல் பிழையைச் சுட்டிக்காட்டி கிண்டல் செய்தது. பென்குவின்கள் தென் துருவத்தில் (Antarctica) மட்டுமே வாழக்கூடியவை என்றும், வட துருவத்தில் உள்ள கிரீன்லாந்தில் பென்குவின்கள் கிடையாது என்றும் சீனா கூறியுள்ளது.

இது தொடர்பாக சீனா வெளியிட்ட AI வீடியோவில், ட்ரம்ப் ‘அங்கிள் சாம்’ உடையில் ஒரு பென்குவினை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. “அமெரிக்க அரசியல்வாதிகளின் அறியாமையையே இது காட்டுகிறது” என சீனா விமர்சித்துள்ளது.

தற்போது வைரலாகி வரும் இந்த பென்குவின் படம், 2007-ஆம் ஆண்டு வெளியான ‘என்கவுண்டர்ஸ் அட் தி எண்ட் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற ஆவணப்படத்தில் இருந்து உருவானது. கூட்டத்தை விட்டுப் பிரிந்து செல்லும் ஒரு பென்குவின், ‘தனித்துவத்தின் அடையாளம்’என இணையத்தில் மீம்ஸ்களாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நகைச்சுவைப் போருக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் விவகாரம் உள்ளது. கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை அமைக்கவும், அங்குள்ள அரிய தாதுக்களை அகழ்ந்தெடுக்கவும் ஆர்வம் காட்டி வருகிறது. இது தொடர்பாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனா இந்த விவகாரத்தில் தான் தலையிட விரும்பவில்லை என்றும், அமைதியான வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.