தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர் தங்கபாண்டிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கேட்டபோது, தங்கபாண்டியின் மகள் வேதசெல்வி மற்றும் மகன் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போக்சோ மற்றும் கொலை மிரட்டல் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, முதியவர் தங்கபாண்டி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இயற்கை மரணம் எய்தும் வரை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், கொலை மிரட்டல் விடுத்த அவரது மகன் மற்றும் மகளுக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் திறம்படச் செயல்பட்டு குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞரைத் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அவர்கள் நேரில் பாராட்டியுள்ளார். பிஞ்சு குழந்தைகளைச் சீரழிப்பவர்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனைகள் மட்டுமே ஒரு பாடமாக அமையும்.
