தூத்துக்குடியில் நான்கு வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அச்சிறுமியின் தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில், தனது ஆண் தோழரின் (Partner) பராமரிப்பில் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். அப்போது, இசக்கி ராஜா (22) என்ற அந்த நபர், அந்தப் பிஞ்சு குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கொலை செய்துள்ளார். முதலில் இந்தச் மரணம் குறித்துச் சந்தேகம் எழுந்த நிலையில், உடற்கூறு ஆய்வின் (Autopsy) முடிவில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கொடூரச் செயலைச் செய்த இசக்கி ராஜாவைப் போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். முதலில் சாதாரண மரணம் என்ற ரீதியில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் கொலை மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. கைதான இசக்கி ராஜா அதே நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சமூகத்தில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், இத்தகைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் குமுறலாக உள்ளது.
