தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் காட்டி வரும் நெருக்கம், திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வந்தாலும் தவெக தலைவர் விஜய்யுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் உரையாடியதும், கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசியதும் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.

விஜய் தனது மாநாட்டில், “கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும்” என அறிவித்திருந்தார். நீண்டகாலமாக தமிழகத்தில் ‘அதிகாரத்தில் பங்கு’ என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் காங்கிரசுக்கு, விஜய்யின் இந்த அறிவிப்பு சாதகமாகத் தெரிவதால், அக்கட்சி கூட்டணி மாற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில் கோவை வந்திருந்த பிரவீன் சக்ரவர்த்தி, “விஜய் ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார்” எனப் பாராட்டியிருந்தார். இந்நிலையில், இன்று தவெக-வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதை முன்னிட்டு, அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பரபரப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

அவர் தனது பதிவில், “2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டுவிட்டது; அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகிப் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை டெல்லி மேலிடமே எடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைமை கூறி வரும் வேளையில், ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி தொடர்ந்து தவெக-வுக்கு ஆதரவான தொனியில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தவெக – காங்கிரஸ் கூட்டணியை விரும்புபவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ள அதே வேளையில், தற்போதைய திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ‘விசில்’ சத்தம் காங்கிரஸின் கூட்டணி மாற்றத்திற்கான சமிக்ஞையா அல்லது பொதுவான தேர்தல் அறிவிப்பா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.