2026 சட்டமன்றத் தேர்தல் களம் என்பது ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம் என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
“செந்தமிழைக் காக்கச் சேனை ஒன்று தேவை” என்ற பாவேந்தரின் வரிகளுக்கேற்ப, 14 வயதில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டக் களத்தில் நின்றவர் கலைஞர். அவர் அன்று ஏந்திய தமிழ்க்கொடியே இன்று திமுக-வின் இருவண்ணக் கொடியாக உயர்ந்து நிற்கிறது. மொழியும் இனமும் கழகத்தின் இரு கண்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசு மீண்டும் இந்தித் திணிப்பில் ஈடுபடுவதாகச் சாடியுள்ள முதலமைச்சர், “மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதி தருவோம்” எனத் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைக் கொண்டு திமுக-வை முடக்கச் சதி நடப்பதாகவும், ஆனால் எதற்கும் பணியாமல் திமுக துணிந்து நிற்கும் என்றும் கூறியுள்ளார்.
2026 தேர்தலை எதிர்கொள்ள திமுக மேற்கொண்டுள்ள அதிரடிப் பயணத் திட்டங்களை முதலமைச்சர் வரிசைப்படுத்தியுள்ளார்: அதன்படி பிப்ரவரி 1 – 8: ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் மகளிர் அணியினர் வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகளைப் பரப்புரை செய்வர். பிப்ரவரி 7: விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு. பிப்ரவரி 28 வரை: அனைத்துத் தொகுதிகளிலும் ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள். மார்ச் 8: திருச்சி மாநகரில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சியான அதிமுக-வை ‘பாஜக-வின் அடிமைக் கூட்டணி’ என விமர்சித்துள்ள அவர், 2026 தேர்தல் என்பது ஆரிய – திராவிடப் போரின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். வரும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு, காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தான் உரையாற்ற இருப்பதாகவும், அன்று முதல் 2026 வெற்றி வரை தொண்டர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
