கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிக்கை, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழுவின் முட்டுக்கட்டை என பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒரு முக்கிய ஆறுதலாக அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் உட்கட்சி கணக்கு வழக்குகளை முறையாக ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம், அதனைப் பதிவு செய்யப்பட்டக் கட்சியாக அங்கீகரித்துள்ளது. அதோடு, அக்கட்சி விடுத்த கோரிக்கையை ஏற்று பொதுச் சின்னங்கள் பட்டியலில் இருந்து ‘விசில்’ சின்னத்தை தவெக-வுக்கு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
விசில் சின்னம் ஒதுக்கப்பட்டாலும், அதில் ஒரு முக்கியமான நிபந்தனையையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: அதாவது தவெக வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில், மற்ற சுயேச்சை வேட்பாளர்களோ அல்லது பதிவு செய்யப்பட்ட பிற கட்சிகளோ ‘விசில்’ சின்னத்தைக் கோரினால், அவர்களுக்கு அந்தச் சின்னம் ஒதுக்கப்படும்.
ஒருவேளை வரும் தேர்தலில் தவெக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, சில தொகுதிகளைத் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கினால், அந்தத் தொகுதிகளில் மாற்று வேட்பாளர்களுக்கு ‘விசில்’ சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே ‘விசில்’ சின்னம் முழுமையாக அக்கட்சியின் வசமிருக்கும். கூட்டணி அமைக்கும் பட்சத்தில், சில தொகுதிகளில் மற்ற வேட்பாளர்கள் அதே சின்னத்தில் போட்டியிடுவது வாக்காளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும் எது எப்படியிருப்பினும், கட்சியின் முதல் தேர்தலிலேயே தங்களுக்கு விருப்பமான சின்னம் கிடைத்துள்ளதை தவெக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
