திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் – பவானி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சஞ்சீவ் மித்ரன் என்ற 3 வயது மகன் இருந்தான். நேற்று முன்தினம் இரவு, குழந்தை வீட்டின் அருகே மழலை மாறாத சிரிப்புடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்துள்ளான். நீண்ட நேரமாகியும் குழந்தையைக் காணாததால் பதறிப்போன பெற்றோர் தேடியபோது, தண்ணீருக்குள் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

​உடனடியாகத் தொட்டியிலிருந்து குழந்தையை மீட்ட பெற்றோர், சற்றும் தாமதிக்காமல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியபோது, அந்தப் பெற்றோரின் கதறல் அங்கிருந்த அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. 3 வயதே ஆன அந்தப் பிஞ்சு உயிர் இப்படித் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் அந்த ஊரையே நிலைகுலையச் செய்துள்ளது.