ஆரணி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவரது மனைவி பவானி. இந்தத் தம்பதியருக்கு சஞ்சீவ் மித்ரன் (3) என்ற மகன் இருந்தான். நேற்று முன்தினம் இரவு, சிறுவன் தனது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தீவிரமாகத் தேடினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவனை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஒரே மகனைப் பறிகொடுத்த பெற்றோரின் கதறல் மருத்துவமனை வளாகத்தையே உலுக்கியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் உடல்நிலை மற்றும் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்
வீட்டின் அருகே தண்ணீர் தொட்டிகள் மற்றும் கிணறுகள் இருப்பின், குழந்தைகளிடம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
